Monday, June 29, 2009

கொள்ளிவாய் பிசாசும்....கிறித்துவ சுடுகாடும்



குறிப்பு: "கொள்ளிவாய் பிசாசும்....கிறித்துவ சுடுகாடும்" ஆயிரம் வார்த்தைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக சுருக்கி வெளியிடப் பட்டது. சுருக்குவதற்கு முன் நான் விரிவாக எழுதி இருந்ததை கீழே கொடுத்துள்ளேன்

சின்ன வயதில் நான் ரொம்பப் பயந்தவன். இப்ப என்ன வாழுது.அறுபது வயதிலும் அப்படித்தான்.தெனாலியில் கமலுக்கு மாதிரி எல்லாவற்றிலும் பயம்.சின்ன வயதில் நான் பயந்ததற்கான காரணங்களைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரை மேலாவாணி மூல வீதிதான் எங்களுக்கு பூர்வீகம். இந்தகடசியிலிருந்து அந்தக்கடசிவரை வீடுகளுடன் வாழ்ந்ததாக பெருசுகள் சொல்வார்கள். எப்பவாவது அந்தப்பக்கம் போகும் போது இன்னும் சிதலம் மாறாமல் அப்படியே இருக்கும் அந்த பெரிய வீட்டை "உள்ளே நுழைந்து தாவாரத்தை தாண்டியவுடன் பெரிய ஹாலு, அதிலேதேக்கு ஊஞ்சல்லை ஆடிக்கிட்டே மாமனாரு வெத்திலை பாக்கை இடிச்சு போட்டுக்கிட்டிருப்பாரு. உங்க அப்பா முதக்கொண்டு கையிலே துண்டை மடிச்சு போட்டுக்கிட்டு நிப்பாக. எப்படியாவது அந்த வீட்டை வாங்கிடனுப்பா.வாங்கின செட்டியாரு வாக்கு தவறாத பெரிய மனுசனப்பா.எப்ப வந்து உன் வாரிசு யார் கேட்டாலும் நியாமான விலையை கொடுத்திட்டு எடுதுக்கிரட்டும் பொன்னுசாமின்னு சொன்னாருப்பா " என்று மாமனாரின் பெயரை சொல்லும் போதெல்லாம் ஒருவிதமான பதட்டத்துடன் 94 வயது வரை சொல்லிக்கொண்டிருந்த எங்க அம்மாவையும், உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த செட்டியாரையும் நினைத்த படியே கடந்து செல்வேன். அண்ணன்கள் அக்காக்கள் பிறப்பதற்கு முன்னரே அப்பாவின் வேலை மாற்றத்தினால் அம்மாவழி தாத்தாவின் கிராமத்திற்கு மாற்றி வந்து விட்டோமாம்.அங்குதான் நான் பிறந்தேனாம்.


நான் பிறந்த ஊர் சின்ன கிராமம்தான். பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தது கிராமத்திலும் ரெண்டு கி.மீ.தூரத்திலிருந்த டவுனுலிம்தான். சுவாரஸ்யமாகவும் சி.டி.யிலும், டி.வி.யிலும் ரீவைன்ட் பண்ணி பார்க்கிறோமே அதுமாதிரி முடிந்தால் உடனடியாக பார்க்கத்துடிக்கும் அற்புதமான காலமது.ஒருவேளை இப்பொழுது நடப்பதை ஒரு பத்து வருடம் கழித்து நினைத்து ஏங்குமோ மனசு, தெரியவில்லை.இயல்பாக கிடைப்பதுதான் மனசுக்கு எப்பவுமே பிடிக்காதே.

எட்டாவது ஒன்பதாவது படிக்கும் வரை பகலில் தைரியமாக டவுன் வரை போய் வந்துருவேன். பஸ்ஸோ, வாகனவசதியோ இல்லாத காலமது.நடந்துதான் செல்லவேண்டும். இருட்டுவதற்குள் வீடுவந்து சேர்ந்துவிடுவேன்.பொழுதடைந்து மச,மசன்னு இருள்சூழ ஆரம்பிக்கும்போது என்மனதிலும் பொந்திற்குள் நுழையும் பாம்பு போல மெது மெதுவா பயமும் புகுந்து விடும். இப்பொழுது மாதிரி பாத் ரூம் வசதி இல்லாத காலமது. அவசரகாரியங்களுக்கு கண்மாய் கரைக்குத்தான் செல்ல வேண்டும். பகலில் ஆள் நடமாட்டம் ஒன்னு ரெண்டு இருப்பதால் பகலில் தைரியமா தனியே சென்று வென்று வந்துருவேன். இரவானால் சிரமம். அண்ணனோ,அக்காவோ தம்பியோ, தங்கச்சியோ குறைந்தபட்சம் ஒருவராவது கூடவரனும். இருபது முப்பதடி தூரத்தில் அவர்களை நிறுத்திவிட்டு அவர்கள் எனக்கு தெரிகிறமாதிரியும், நான் அவர்களுக்கு தெரியாத மாதிரியுமான 'டெக்னிக்கலான' ஒரு இடத்திலிருந்து போய் வந்துருவேன்.


எங்க ஊர் எல்கையில் ஒத்தையா ஒரு பிள்ளையார் கோவில். பூசாரி யாரும் கிடையாது. ஆனாலும் பிள்ளையார் சந்தோசமா இருக்கிற மாதிரிதான் தோணும். இரவு ஏழு மணிக்கெல்லாம் கிளியாஞ்சட்டியில் விளக்கு மினுக், மினுக்குன்னு எரிய ஆரம்பிச்சுரும். நாள் தவறாமல் பிள்ளையாரை சந்தோசப்படுத்த அழகக்காவால் செய்யப்படும் கைங்கரியம். காதலிக்க நேரமில்லை படத்தை நான் பார்ப்பதற்கு முன்னர் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்த துர்க்கா ஆறுமுகத்தால் நாகேஷ் பாலையாவிற்கு கதை சொன்னதை வரிமாறாமல், பாவம் மாறாமல் சொன்னதும் வயிறு வலிக்க நான் சிரித்ததும் அந்த கோயில் வாசலில்தான். சைடில் பெரிய பொட்டல். அந்த பொட்டலில் நான், பின்னாளில் டைரெக்டர் ஆப் மெடிகல் சர்வீஸ் ஆகப்போகிற நாகநாதன், புதுக்கோட்டையில் பேராசிரியராக பணிபுரியப்போகிற சேது ராமலிங்கம், அந்தக்காலத்திலியே துபாய் போய் சம்பாதித்து மூணு நாலு முறை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிக டெபாசிட் போட்டதற்கான பரிசு வாங்கிய சுவடு எதுவும் தெரியாமல் பொழுதுபோக பழைய சின்ன சலூன் கடையை திரும்பவும் ஆரம்பித்து பார்க்கும் போதெல்லாம் அதே பாந்தத்துடன் சிரிக்கப்போகும் பாலுசாமி பூக்கடை வைத்து இப்ப பார்த்தாலும் 'போலீஸ்....' என்றுதொண்டை கிழிய கத்தபோகும் கணபதிராமன் எல்லோரும் சேர்ந்து விளையாடியது அந்த பொட்டலில்தான்.அவன் கத்துவதற்கான அர்த்தத்தை நாங்கள் இருவர் மட்டும்தான் புரிந்துகொண்டோம் என்பதற்கு அடையாளம் எங்களிடையே போய் வரும் சின்ன சிரிப்புதான். அவன் சைக்கிள் ஓட்ட கத்து குடுத்து 'முதுகை வளைக்காதே ...முதுகை வளைக்காதே' ன்னு அடிச்சிக்கிட்டே சைடில் ஓடி வரும்போது எதறக்க காக்கி டிரஸ் போட்டு வந்த பேங்க் வாட்ச் மேனை போலீஸ் என்று பயந்து நான் தலை குப்புற விழுந்ததை 52 வருசமா மறக்க அவனாலும் முடியலை.என்னாலும் முடியலை.


பம்பரம், கிட்டிபுள், பேந்தா, குதிரை சில்,சிங்கி, செதுக்கு முத்து, பச்சைக்குதிரை, அத்திலி, புத்திலி, மக்கான், சுக்கான், பால், பறங்கி, லாட்டுமே, லூட்டுமை, சீ, சல்'ன்னு பத்தாவதாக ' சல்' வருபவன் கண்ணை பொத்திக்கொள்ள மற்றவைங்க ஓடி ஒளிந்து கொள்வது, நொண்டி, கபடி இப்படி பல விளையாட்டு விளாடுவோம்.ஜெயிக்கிறவனுக்கு சந்தோசம், தோக்கிரவனுக்கு சங்கடம். இந்த ரெண்டு உணர்ச்சிதான் எங்களுக்கு தெரியும். யாரு என்ன சாதி.என்ன மதம் ஒரு எழவும் தெரியாது. அம்மா யாரையாவது அண்ணேன்னு கூப்பிட்டா மாமான்னு மொறைவச்சு கூப்பிடுவோம். ஐத்தைன்னு கூப்பிட்டா அப்பத்தான்னு கூப்பிடத்தான் பழகிருந்தோம். இப்ப இருக்கிற சிறுசுகளுக்கு நடிகர் விஜியின் புண்ணியத்திலே கபடி பிரபலமாகிவிட்டது வேறு விளையாட்டை தெரியாது. இப்போ பெரிய முன்னேற்றம் என்னான்னா, கிராமத்தில் கிரிக்கெட் விளையாடறாங்க. ஜாதிக்கு ஒரு பொட்டல்ன்னு, நாலைந்து பொட்டலில் தனித்தனியாக. அரசியல்வாதிகளின் பகுத்தறிவால் ஏற்பட்ட வேறு மாதிரியான விபரீத பரிணாம வளர்ச்சி. கணபதி ராமன் யாருடன் விளையாட பிரியப்படுரானோ இல்லையோ என்னுடன் விளையாட ரொம்ப பிரியப்படுவான். குண்டோ பம்பரமோ நான் ஜெயத்திருந்தாலும் அதட்டிஅவன் ஜெயித்ததாக சொல்லி வாங்கி சென்று விடுவான்.எனது பயத்தை பற்றிய விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.


சந்தோஷ பிள்ளையாரைத் தாண்டினால் டவுன் ஆஸ்பத்திரி முக்குவரை ஆள் அரவம் இருக்காது. இப்ப ரோட்டைத்தவிர இண்டு இடுக்கெல்லாம் மூச்சு முட்ட முட்ட வீடுகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. அப்ப இடைப்பட்ட தூரத்தில் இந்தப்பக்கம் ஒரு ஆறேழு புளியமரம். ஒரே ஒரு ஆலமரம். ஒரு பனை மரம். அந்த பக்கம் ஐந்தாறு புளிய மரம். ஒரு புங்க மரம் எல்லாம் போய் பாலத்துக்கு இந்த பக்கம் ஒருபுளியமரம். அந்தப்பக்கம் ஒரு புளியமரம். உனக்கு நான் துணை.எனக்கு நீ துணைன்னு. அவைகளைக் கடக்கும் போது ரொம்ப நாள் கழித்து பாக்கிற உறவினர்களை பார்க்கிற சந்தோஷமும்,பெரு மூச்சும் அடி நெஞ்சில் லேசான வலியும் உணர முடிகிறது.


முக்கியமான விஷயம் என்னான்னா, கிராமத்திலிருந்து ஒன்னாவது கிலோ மீட்டர்லே ஒரு கிறித்துவ சுடுகாடு. அதிலே புதைக்க மட்டும் செய்வதினால் அதிலே எனக்கு பயம் கொஞ்சம் கம்மி. அடுத்தாற்போல் இந்துக்களை எரிக்கவும், புதைப்பதற்குமான சுடுகாடு இருக்கு.

மாசத்துக்கு ஒன்னோ ரெண்டோ எரிஞ்சிட்டிருக்கும். பத்தாதுக்கு அதான் கொள்ளி வாய்ப்பிசாசுன்னு எங்க காலத்து பெருசுகள் சொல்லி வைத்திருந்தாயிங்க. பகல்ன்னாலும் சரி, இரவானாலும் சரி துணையோடு வந்தாலும் ரெண்டையும் ரொம்ப அவஸ்தையோடுதான் கடந்து போவேன். ரெண்டு சுடுகாடுகளின் வாசல்லை எலக்ட்ரிக் போஸ்ட். குண்டு பல்ப் ரெண்டும் ஒத்தை ஒத்தையா ''என்னால் இவ்ளோதான் முடியும்.முடிஞ்சா பார்த்து போய்க்கோன்னு" ராத்ரியிலே வீம்பா தொங்கிட்டிருக்கும். நிலாகாலங்கல்லை பயம் பயம்தான்.இருந்தாலும் கொஞ்சம் பரவால்லை. மற்றைய காலங்களில் குண்டு பல்ப் அண்ணாச்சிகளை தாண்டினால் கும்மிருட்டுத்தான். உத்தேச நடையோடுதான் வீடு வந்து சேர முடியும். சாயந்திரம் ஆறுமணிவரை டவுனிலிருந்து ரெண்டு சுடுகாட்டையும் திக்கி திணறி கடந்து வந்து விடுவேன். அதுக்கு மேலன்னா ஆஸ்பத்ரி முக்குலே வந்து நிப்பேன். ஆணோ, பொண்ணோ யாராவது வர்றாங்களான்னு பாப்பேன். கண்ணில் தட்டு பட்டுவிட்டால் பரீட்சை சமயத்திற்கு மட்டும்தான் திறப்பேன்னு சத்யம் பண்ணியதை மீறி புத்தகத்தை திறந்து ஆழ்ந்து படிப்பது போல் அவர்கள் என்னை கடக்கும் நேரத்தை லேசான சைடு பார்வையால் கவனித்து கொண்டிருப்பேன். முப்பதடி தூரத்தை தாண்டியதும் எதார்த்தமாக வருவது போல் பின்தொடர்ந்து சுடுகாடுகளைக்கடக்கும் போது எதிர் திசையில் முகத்தை வைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்து விடுவேன். சுடுகாடுகளைக்கடக்கும் போது பெரு மூச்சு ஓன்று வரும்.அந்த நேரத்தில் ஏற்படற சந்தோசத்தை எழுத்துக்களில் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஒரு சமயம் டிகிரி ரெண்டாம் வருஷம் படிக்கும்போது டவுனிலிருந்த சித்தப்பா தவறி விட்டார் .அறுபது வயதுதான். சாகக்கூடிய வயசில்லைதான். ஊர் உலகத்திலிருந்து சொந்தங்களின் கூட்டம். அழுது புரண்டார்கள். மாரில் மாறி, மாறி அடித்துக்கொண்ட பெண்கள் கூட்டம். பார்க்க, பார்க்க எனக்கும் அழுகை வந்துவிட்டது. ராத்திரி ஒன்பது மணியாகி விட்டது. உறவுகளின் கூட்டத்தால் சித்தப்பா வீட்டில் படுக்க இடமில்லை. சைக்கிளில் வீடு திரும்ப முடிவு செய்து நம்ம பேவரைட் ஆஸ்பத்ரி முக்கு வரை வந்து விட்டேன். சைக்கிள் செயின் கழண்டுவிட்டது போல் கையால் பெடலை சும்மா சுத்துநேனே தவிர கவனமெல்லாம் யாராவது வருகிறார்களா என்பதிலேதான் இருந்தது. ரொம்ப நேரம் பார்த்தேன். ஒரு சுடுகுஞ்சியும் காணவில்லை. இனி வேலைக்காகாதுன்னு முடிவு செய்து செகண்ட் சோ பார்த்து விட்டு கிராமத்திற்கு திரும்புவதை அப்புறம் முடிவு செய்யலாம்ன்னு டவுன்னில் இருக்கும் தியேட்டர் வரை வந்து விட்டேன்.சொந்தக்காரைங்க யாராவது பார்த்தால் காறி துப்பி விடுவார்களோன்னு பயம் வேறே. நல்லா ஞாபகம் இருக்கு. இருமலர்கள்-சிவாஜி, பத்மினி, சரோஜாதேவி நடித்தது. பெல் அடிக்கும் வரை காத்திருந்தேன். 30 பைசா, 46 பைசா, 75 பைசா, ரூ.1.25 இப்படி தியட்டரில் நாலு வகுப்பு. மத்ததெல்லாம் ஏதோ நியாயம்.அதென்ன 46 பைசா. தெரிந்தவர்கள் சொன்னால் ரொம்ப நாள் பிரச்சனைக்கு எனக்கொரு முடிவு கிடைக்கும். அய்யா அப்ப காலேஜில் படிப்பதால் முதல் வகுப்பிற்கு குறைந்து போவதில்லை. கடைசி வகுப்பில் இருப்பதால் முன்னாள் இருக்கும் வகுப்பில் இருப்பவர்கள் லேசு வாசாகத்தெரிந்தார்கள். கூர்ந்து பார்த்தேன். கேதத்துக்கு வந்திருந்த ஆணு,பொண்ணு பாதிப்பேரு அங்கதான் இருந்தாங்கே. காலம்தான் மனப் புண்ணை ஆற்றும் என்று கேள்வி பட்டிருக்கேன். ஒரு ஆறுமணி நேரத்திற்கே அவ்வளவு பவர் இருந்ததையும், சித்தப்பா பாதி தூரம் போவதற்குள்ளேயே இப்படி ஆத்தும் என்பதையும் என்னால் நம்பத்தான் முடியவில்லை. ஒருத்தனுக்கும் தெரியாமல் படம் பார்க்காமல் சைககிளை எடுத்துக்கொண்டு கேத வீட்டில் இருந்த அம்மாவிடம் சென்று பின்னால் உட்கார்ந்து கொள்ளுங்கள் வீட்டிற்கு ரெண்டு பேரும் போய் விடுவோம்ன்னுசொன்ன போது சொந்தங்க தப்பா நினைப்பார்கலப்பா; நீன்னா போப்பான்னு சொன்னபோது தியேட்டரில் பார்த்ததை சொல்ல ஏனோ மனம் வரவில்லை. வெக்கத்தை விட்டு சுடுகாட்டை தாண்டிபோக முடியாத எனது இயலாமையை அம்மாவிடம் அப்பொழுதுதான் சொன்னேன். என்னை ஒரு பார்வை பார்த்தார்கள்.அதில் இரக்கம் இருந்ததா,கோபம் இருந்ததா வருத்தம் இருந்ததா சரியாக தெரியவில்லை.


அடுத்தநாள் அதி காலையில் என்னை எழுப்பி வீட்டிற்கு கூட்டி வந்து தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி ஈரத்துண்டுடன் வீட்டில் இருந்த கோயில் வீட்டிற்க்குள் போகாமல் வாசல் படியில் நிறுத்தி நாலு இஞ்சுக்கு நாலு இஞ்சு அளவுள்ள ஒரு வெல்வெட் கலர் சின்ன பெட்டியை கொடுத்தார்கள். குறுக்கேயும் நெடுக்கேயும் கருப்பு கயிறால் கட்டப்பட்டிருந்தது. 'சாமியை கும்பிட்டு பையில் வைத்து கொள் .காத்து கருப்பு உன்னை அண்டாது' என்றார்கள்.

எங்க அம்மா கிராமத்து மனுசிதான். பாதி வைத்தியர். கிராமத்து சிறுகுழந்தைகளுக்கு ஏராளமான வயிற்று உபாதைகள், சீதள நோய் பசியின்மையை போக்கியவர். பரோபகாரி. அப்பாவின் மதி மற்றும் நிதி மந்திரி. அம்மாவை குளிப்பாட்டி வைத்திருக்கும் போது பெரிய மாலையை போட்டு 'பஞ்ச காலத்திலே எம் பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை சோறு கொடுத்த தெய்வமப்பா'ன்னு மாணிக்க தேவர் அழுது சொன்னதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.


அம்மா கொடுத்த வெல்வெட் பெட்டியை பையில் வைத்து கொண்டு நான் முதலில் விளையாட கூப்பிட்டது கணபதி ராமனைத்தான். குண்டு, பம்பரம் இத்யாதிலிருந்து நாங்கள் டென்னி கேட்டுக்கு மாறி இருந்தோம். அது நான் கொஞ்சம் நல்லா விளாடுவேன். ஓங்கி நான் கட் அடிக்கும் போது தரையில் விழறதுக்கு முன்னாலே 'அவுட்' என்று அவன் வழக்கம்போல் கத்த 'நாயே, செருப்பு பிஞ்சிரும்.நல்லா பாரு கோட்டுக்குள்ளேதான் விழுந்துருக்குன்னு' நான் கட்டை தொண்டையில் திரும்ப கத்திய போது என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு 'ஆமாம்'ன்னு ஒத்துக்கிட்டான். பெட்டி வேலை செய்வதை என்னால் உணர முடிந்தது. அதிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம். இப்பெல்லாம் இரவு நேரங்களில் பேன்ட் பையிலிருந்த பெட்டியை இருகப்பற்றிகொண்டு சுடுகாடுகளைக் கடந்து விடுவேன். முக்கியாமான விஷயம், சுடுகாடுகளை பார்த்துகொண்டே கடக்கவும் தைரியம் வந்தது.

இப்ப வெளியே போனால் செல் போனை தேடுவோமே, அது மாதிரி வெல்வெட்டை தேட ஆரம்பித்தது மனசு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பெட்டி இல்லாமலே வெளியே போக பழக ஆரம்பித்தது. என்ன ஒரு தைரியமுன்னா ,பவரான பெட்டி வீட்டில் இருந்தாலும் காப்பாற்றத்தானே செய்யும் என்ற நம்பிக்கையில். அப்புறம் காலத்திற்குத்தான் யாருட்டையும் சொல்லிட்டு போகணும்ன்னு ஒரு விவஸ்தை இல்லியே. உருண்டு....ஓடி.......போயிருச்சு.

அம்மாவுக்கு எழுவது வயதிருக்கும். அவரது தகப்பன் போன்ற மாமனாரின் வெத்தலை உலக்கையை வைத்து இடித்து வீட்டில் வெத்தலை போட்டுகொண்டிருந்தது. நான் சாமி கும்பிட்டு கொண்டிருந்தேன். சாமி படத்திற்கு பக்கத்தில் இத்து போன கருப்பு கயிறுகளுடன் அதே வெல்வெட் பெட்டி. அதைத் தொட்டு கும்பிடும் பொழுது தவறி விழுந்து பெட்டி திறந்து கொண்டது. உள்ளே சின்னதா ஒடைந்த கண்ணாடி சில்லு. 'என்னம்மா இதுன்னு' நான் கேட்ட போது அப்பா இறந்த பின்னர் கெக்கை போட்டு கடகாப்பல்லு இருந்த இடம் தெரிய அம்மா சிரித்ததை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. உங்கப்பா கல்யாணமாகி முத முதல்லே வாங்கி கொடுத்த தோடு இருந்த பெட்டிப்பா. அது உங்க அப்பாவோட உடைந்த கண்ணாடிப்பா'.


அம்மா இறந்த ஏழு வருஷம் கழித்து ரிட்டயர் ஆயி சிவனேன்னு வீட்டில் இருந்த போது அமெரிக்கா வந்துதான் ஆகனும்ன்னு பிளைட் டிக்கெட் வாங்கி பையன் அனுப்பிய போது தட்ட முடியவில்லை. பைக்கில்பின்னால் உட்கார்ந்து போகவே பயப்புடும் நான் பிளைட்டில் செல்ல வெல்வெட்டு பெட்டிக்குபதிலாக கூட எடுத்து வந்தது 'காயத்ரி மந்திரமும்''ராம ஜெயமும்தான்'.

18 comments:

Kannan said...

சித்தப்பா,
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது, குறுகிய நேரத்தில் super ra கலகிடிங்க.

இளைய கவி said...

நல்லா இருக்கு தல

அண்ணாதுரை சிவசாமி said...

கண்ணன்,இளைய கவி
உங்களின் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.

பா.ராஜாராம் said...

சித்தப்பா,இந்த நிகழ்வுகளோடு ரத்த சம்பந்த பட்டவன் என்பதை பிரித்துவிட்டு பார்க்கும் போதும்...அவ்வளவு அற்புதமாக வந்திருக்கு சித்தப்பா!
மெருகு கூடி..கூடி வருகிறது எழுத்து.கண்டிப்பாக 1500 உண்டு.பத்திரமாக வைத்திருங்கள்!
ஊர் வரும்போது,அம்மாவிடம்,பீனாவிடம் திட்டு வாங்கி(நல்ல அப்பா,மகன்டா...)கொண்டே மொட்டை மாடியில் "சரக்கு" அடிப்போம்!
இதைவிட இந்த 1500 இல் வேறு சந்தோஷ செலவு இருக்க முடியுமா....இல்லையா சித்தப்பா..தொடர்ந்து எழுதுங்கள் சித்தப்பா..

கவிதாசிவகுமார் said...

சித்தப்பா உங்களின் இளம் வயது அனுபவங்களை படித்ததும் 'சித்தப்பா பயந்த சுபாவம்' என்பதை நம்ப முடியவில்லை.அம்மாயீ பற்றி படித்தவுடன்,வெற்றிலை பாக்கு வாசத்துடன்,"எப்பத்தா வந்த" என்ற அந்த வாஞ்சையான அன்பையும்,கோடை விடுமுறையில் ரத்தினவல்லி ஆச்சி அன்பு கலந்து தந்த மங்கலத்து குழாபுட்டும் மனக்கண்முன்னே வந்து மனம் கனமாகி போனது.மேலிருந்து அன்புடன் நம்மை ஆசிர்வதிக்கட்டும்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள் சித்தப்பா.
-கவிதாசிவகுமார்

அண்ணாதுரை சிவசாமி said...

எனதருமை கவிது,எனதருமை ராஜா
உங்களுடைய வாழ்த்துக்கள் ஊருக்கு போனாலும்
ஓய்வு இல்லாமல் வேலைகள் இருந்தாலும் ஒன்னு,ரெண்டாவது
எழுதுவோமே என்ற எண்ணத்தை உண்டு பண்ணி உள்ளது.
நன்றி.

venkataprathab said...

Appa ungalin siru vayathu anubavangalai marakkamal appadiya nyabagam vaithu eluthi asathitinga. kalakkungal, Vaalthukkal.

Vigi.

அண்ணாதுரை சிவசாமி said...

அனுபவங்களும் நிகழ்வுகளும் சத்யமடா மகனே.
எனது நோக்கம் அதுவன்று.சில சித்தாந்தங்களும்
நோக்கங்களும் சில சுயநலவாதிகளால் சிதைக்க
பட்டதால் பிற்காலத்தில் அவை மூட நம்பிக்கைகள்
என்று நம்ப வைக்க அவசியம் ஏற்பட்டது ஏன்
என்பதை என் சிற்றறிவுக்கு எட்டியவரை சொல்ல
முயற்சித்திருக்கிறேன்.பார்க்கலாம்.

ஊர்சுற்றி said...

மையக்கருத்து நல்லாத்தான் வந்திருக்கு... ஆனா சிறுகதை என்பதை விட - உங்கள் வாழ்க்கை அனுபவம் என்பதுதான் சரி.

அண்ணாதுரை சிவசாமி said...

ஊர்சுற்றி அவர்களே! உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள்."சிறுகதைக்கான இலக்கணமே எதுவாக இருந்தாலும் அதற்கென்று
ஒரு ஆரம்பமும் முடிவும் இருந்தால் போதுமானது" என்று ஒரு விற்பன்னர் சொன்னதை
எங்கோ படித்ததாக ஞாபகம்.சட்டென்று பெயர் ஞாபகம் வரவில்லை.மன்னிக்கவும்.
'நான்' என்பதற்கு பதிலாக 'குப்புச்சாமி' 'வெள்ளைச்சாமி' என்றிருந்தால் ஒருவேளை
உங்கள் மனது இதை கதை என்று ஒப்புக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

அதே மாதிரியான ஒரு 1கிமீ தூரமுள்ள என்னோட கிராமத்துக்கு பல வருசம் முன்னாடி டியூசன் முடிச்சிட்டு ராத்திரி 9 மணிக்கு என்னோட சைக்கிள்ள பக்கத்து ஊர்ல இருந்து தினமும் போவேன். அந்த ஊர்ல பெல்ல அடிக்க ஆரம்பிச்சா வீட்ல வந்துதான் பெல்லுல இருந்து கைய எடுப்பேன். ஏதோ ஒரு குருட்டுதைரியம் அந்த பெல் சத்ததுல>>>>> :)
நினைவை மீட்டெடுத்துத்தந்ததுக்கு நன்றி

அண்ணாதுரை சிவசாமி said...

பழைய நினைவுகள் தரும் சந்தோசங்கள் அற்புதமானவை,
இல்லையா Mr.அமிர்தம்.தங்களின் வருகைக்கு ப்ரியம்
கலந்த நன்றிகள்.

Unknown said...

Appa romba nalla irrukuuuuu,

Ivvallu nal Building strong but basement weakunnuuuuuuuu theariyama pochyeaaaaaaa(Chumma)

அண்ணாதுரை சிவசாமி said...

அமீர்,
எங்கப்பா இருக்கே?நாலு நாட்களுக்கு முன்னர்தான் பிரசாத்திடம் உன்னை கேட்டுகொண்டிருந்தேன்.
எப்படிப்பா இருக்கே.அப்பா,அம்மா நலமா? உனது இ மெயில் அட்ரஸை தெரியப்படுத்தவும்.

ஹேமா said...

வணக்கம் ஐயா.உண்மையில் ரசித்தாலும் மனதை வலிந்தெடுத்த வலியுள்ள நினைவலைகள்.ஒரு வரி விடாமல் வாசித்து ரசித்தேன்.என்ன சொல்ல என்று தெரியவில்லை.பெரியவர்களோடுகூடக் கூடி வாழக் கொடுப்பனவு இல்லாமல் போய்விட்டோம்.இன்றைய தலைமுறையினர் பெற்ற சாபங்களில் இதுவும் ஒன்று.

ஐயா,எத்தனையோ புதிய தமிழ்ச் சொற்களை உங்கள் பதிவில் அறிந்துகொண்டேன்.சிதலம் கைங்கரியம்,
கிளியாஞ்சட்டி,கம்மி என்று இன்னும்பல.அதோடு எத்தனை விதமான விளையாட்டுக்களின் பெயர்கள் இருக்கு.அப்பாடி....உறவுகளுக்கு உணர்வுகளுக்கு கொடுக்கப்படும் மரியாதைதான் எவ்வளவு.அதனால் ஏற்படும் குடும்பத்தின் நெருக்கம்.

அடுத்து நான் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்ட உங்கள் சம்பவம்.அருமை ஐயா.நிறைய எழுதணும் நீங்க.முடிஞ்சதை நாங்களும் கத்துக்கிறோம்.சுகமா சந்தோஷமா இருங்க ஐயா.

//அவன் சைக்கிள் ஓட்ட கத்து குடுத்து 'முதுகை வளைக்காதே ... முதுகை வளைக்காதே' ன்னு அடிச்சிக்கிட்டே சைடில் ஓடி வரும்போது எதறக்க காக்கி டிரஸ் போட்டு வந்த பேங்க் வாட்ச் மேனை போலீஸ் என்று பயந்து நான் தலை குப்புற விழுந்ததை 52 வருசமா மறக்க அவனாலும் முடியலை. என்னாலும் முடியலை.

சாயந்திரம் ஆறுமணிவரை டவுனிலிருந்து ரெண்டு சுடுகாட்டையும் திக்கி திணறி கடந்து வந்து விடுவேன். அதுக்கு மேலன்னா ஆஸ்பத்ரி முக்குலே வந்து நிப்பேன். ஆணோ, பொண்ணோ யாராவது வர்றாங்களான்னு பாப்பேன். கண்ணில் தட்டு பட்டுவிட்டால் பரீட்சை சமயத்திற்கு மட்டும்தான் திறப்பேன்னு சத்யம் பண்ணியதை மீறி புத்தகத்தை திறந்து ஆழ்ந்து படிப்பது போல் அவர்கள் என்னை கடக்கும் நேரத்தை லேசான சைடு பார்வையால் கவனித்து கொண்டிருப்பேன்.//

பாருங்க உங்க அம்மா அந்தக்காலத்திலேயே எவ்வளவு புத்திசலியா இருந்திருக்காங்க !

அண்ணாதுரை சிவசாமி said...

ஹேமா,
நீ என் தளத்தில் கால் பதித்ததேயே பெருமையாக நினைக்கிறேண்டா....

நேசமித்ரன் said...

அண்ணாதுரை அண்ணே
உங்க பின்னூட்டம் ரொம்ப நெகிழ்வும் உணர்ச்சியூட்டும் மன நிலைக்கும் என்னை கொண்டு போயிருச்சு . என்னோட கவிதை உங்களுக்கு பிடிச்சுப் போனது ஒரு நினைவை மீட்டுக் கொண்டு வந்ததுன்னு நீங்க சொல்றதே பெரிய அங்கீகாரம்
உரிமையோட இந்த தம்பிகிட்ட நீங்க சொல்ற எதையும் கேட்டுகிருவான் ஒன்னும் வெசனப்பட வேண்டியதில்ல நீங்க. நம்ம மக்க மாருங்கதான் யெல்லாம் .
எதுக்கு இம்புட்டு கஷ்டப்பட்டு இந்த கவிதைய எழுதிகிட்டிருகோம் யாருக்குலா மாப்பி இதெல்லாம்ன்னு தோனும்னே . இப்போ இந்த எழுத்து இம்புட்டு மனுசங்கள சம்பாரிச்சுக் குடுக்கும்னா .என் எழுத்து மேல இம்புட்டு நம்பிக்கை வச்சு நீங்க பேசுறதையெல்லாம் பார்க்குறப்ப . எழுதிக்கிட்டே இருக்கலாம்னே ...

அண்ணாதுரை சிவசாமி said...

நேசா,
சட்டென்று உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவன் நான்.அது சில சமயங்களில் சந்தோசத்தையும்,பல சமயங்களில்
சங்கடத்தையும் கொடுத்துள்ளன."இது உடம்புக்கு கெடுதிப்பா..."மகன் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான்.கெடுதிகள் வந்து வந்து போய்க்கொண்டுதான் இருந்தன.அறுபது வயதுக்குப் பின் கெடுதி வந்தென்ன....போயென்ன.
பாராட்டுதல்கள் மட்டும் விமர்சனம் அல்ல.ராஜாவிற்கு இத்தனை முகம் தெரியாத உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது 'ஜ்யோராம் சுந்தர்'.அவர் எழுத்துக்கள் என்னை ஈர்க்கவும் செய்தன;பாதிக்கவும் செய்தன.வளர்ந்து ஆழமாக வேர் விட்ட மரம்.எந்த வெட்டுகளையும் எளிதாக எதிர் கொள்ளும் என்ற எதிர் பார்ப்பில் அவரது 'பறக்கும் அனுமார்' (ஜூலை மாதம்)கவிதையில் எனது விமர்சனத்தைப் பதிவு செய்தேன்.
என் எதிர் பார்ப்பு சரிதான்.என் விமர்சனத்தை சரியென்று தைரியமாக ஒப்புக்கொண்டு என் ஆலோசனைக்கு 'ஒரு காசை' மட்டும் வீசி எறிந்துவிட்டு அவருக்கான இயல்பிலேயே அவர் போய்க்கொண்டிருக்கிறார்.அவரைப் பொறுத்தவரை எது சரியென்று அவருக்கு படுகிறதோ அதில் போய்க் கொண்டிருக்கிறார்.
எனவே நேசா பிறரது விருப்பு, வெறுப்பு,விமர்சனங்களுக்கு ஆட்படமால் எதை எடுத்தால் உன்னால் ஜெயிக்க
முடியுமோ அதை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இரு.
மதுரைக்கார குசும்பண்ணே...என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறாய்."ஆணோ பெண்ணோ வருவதை.."அன்று
நான் எழுதியதை ...'ஆணோ'வை என் பின்னோட்டத்திற்கான உன் முந்திய பதிலுரையில்..சாமார்த்தியமாக எடுத்துள்ளாய் .....இதற்கு பெயர் என்னவாம்?
என் எழுத்துக்கள் அல்லது பின்னூட்டங்கள் யார் மனதையோ பாதித்திருக்கிறது.அமெரிக்கா வந்த இடத்தில்
பொழுது போக வழியின்றி தட்டுத்தடுமாறி கம்புயூட்டர் இயக்ககற்று..நண்பர்,உறவினர் தூண்டுதலால் .............சாப்பிடும்போது கூட கையில் ஏதேனும் புத்தகம் இல்லாமல் சாப்பிட முடியாத நான்......
இதுவரை எதுவுமே எழுதியறியாத நான்... ஒரு மாதத்திற்கு முன் எழுத ஆரம்பித்து என் தளத்தில் கதை என்ற
பெயரில் நான் கிறுக்கியதற்கு தமிழிஷ்ல் 7 வோட்டுகள் போடப் பட்டிருந்தன.தற்போது 2 வோட்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 5 வோட்டுகள் மீதம் உள்ளன.ஆக.... அந்த 2 வோட்டுகளும் என் எழுத்துகளுக்கு
போடப்பட்டவை அல்ல.எனக்காகப் போடப்பட்ட பிச்சை...இல்லையா?அந்த 5 ம் பிச்சையா..வோட்டா..அறுதியிட்டு சொல்ல முடியவில்லை.
எல்லோரையும் நான் கேட்பது....இந்த மாதிரியான...பிச்சைகளை மட்டும்...எதிர் பார்த்து எழுதப் போகிறீர்களா....விமர்சனத்துக்கு பயப்படாமல்...சரியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு.. தன் மனதிற்கு சரியென்று பட்டதை,பிடித்ததை மட்டும் எழுதப்போகிறீர்களா?யோசியுங்கள்.... போட்டவோட்டைத்
திரும்ப எடுத்துக் கொண்ட கனவான்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வேலைப்பளுவில் இனி என்ன எழுதப் போகிறோம்...நினைத்துக் கொண்டிருந்தேன் நான்....அந்த 2 வோட்டுகள்தான் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் என்னை "வா வா உன்னை வாட்டி வதைக்க காத்து கொண்டிருக்கிறோம்".... பேரன்போடு எதிர்கொண்டழைக்க ஆயிரம் பொறுப்புகள் காத்து நின்றாலும்...மனதுக்குப் பிடித்ததை மாதத்திற்கு ஒன்னு ரெண்டாவாது எழுத வேண்டும் என்ற தீர்க்கமான முடிவையும்...தெரிந்தோ தெரியாமலோ நான் எழுதிய பின்னூட்டங்கள் யார் மனதையோ பாதித்திருக்கிறது என்பதை அறிய நேர்ந்ததால்...ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டு....பிறர் தளங்களில் பின்னூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் என்னுள் விதைத்துள்ளது.வாழ்த்துக்கள்.

Post a Comment