Thursday, June 4, 2009

புதிய அனுபவமும்! விபரீதமான கற்பனையும்!

"என்னலே! எப்படி இருக்கே.....சொல்லாம கில்லாம போய்ட்டியேலே..... அமெரிக்கா எப்படிலே இருக்கு!"-திருநெல்வேலியிலிருந்து என் ஆத்மார்ந்த நண்பன்.
"மூதேவி! உன்ட்ட போன்லே சொன்னேனே! மறந்துட்டியாடா மாப்பு!" -இது மதுரைக்காரனான நான்.
"ரிட்டயர்ட் ஆனதும் நம்ம செட்டுலை முதல்லே அமெரிக்கா போனது நீந்தான்லே! அமெரிக்கா எப்படிலே இருக்கு? அமெரிக்காவில் பொல்லூசனே(Pollution) இருக்காதாம்லே?”
"இருக்காது. இருந்தாலும் ஒன்னும் பண்ணாது."
"என்னலே சொல்லுதே! கொஞ்சம் விளங்கிற மாதிரி சொல்லுலே?"
நான் போன் போட்டதாலே அவனுக்கு வைக்க மனசில்லை.
"ரோட்லே மனுசங்களையும் பார்க்க முடியாது.சைடுலே மண்ணையும் பார்க்க முடியாது. மணலையும் பார்க்க முடியாது."
"என்னலே சொல்லுதே! அதை வச்சுதானடே இங்கை பல பேர் கோடிஸ்வர பயலயிட்டாங்கே! மனுசங்களை பார்க்க முடியாதா?"
"ஆமாம். இருந்தா கண்ணாடியை மூடிக்கிட்டு காருக்குள்ளே இருப்பாய்ங்க. இல்லாட்டி கதவை மூடிக்கிட்டு வீட்டுக்குள்ளே இருப்பாய்ங்க. மண்ணு, மணலுன்னு இருந்தாத்தானே காற்றுன்னு அடிச்சா தூசின்னு ஒன்னு பறக்கும். எல்லாத்தையும் புல்லை போட்டு மூடிட்டா? தூசியாவது.. கீசியாவது அப்படியே தப்பிதவறிய ஒன்னு,
ரெண்டு தூசியும் காருக்குள்ளேயும், வீட்டுக்குள்
ளேயும் இருக்கிறவைங்களை என்னடா பண்ண முடியும்,
பாவம்! பொல்லூசன்னு இல்லை, அதுக்கு ஆத்தா அப்பத்தா கூட ஒன்னும் பண்ண முடியாது.
"
"வீடு கட்டுவாயின்கில்ல? ரோடு போடுவாயின்கில்ல?"
நான் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. வடிவேல் மாதிரி கேள்வி மேல் கேள்வி. தவிர நாங்கள் ரெண்டு பேரும் ஹைவேஸில் வேலை பார்த்தவர்கள்.
"அப்பெல்லாம் பெரிய வலையையோ, தார்ப்பாயையோ போட்டு மூடி நம்ம மார்கழி மாசத்திலே தூங்குவமே, அது மாதிரிமண்ணையும் மணலையும் தூங்க வச்சிருவாங்கே."
"என்னலே! என்னாலே நம்பவே முடியளிலே."
"இன்னும் ஒரு விஷயம். சொன்னா சத்தியமா நீ நம்பவே மாட்டே! என் மகன் இருக்கும் வீட்டில் பின் பக்கமாக 6 அடிக்கு 7 அடி வெறும் கண்ணாடி கதவு.நம்ம ஊரு ஓமக்குச்சி கூட சுண்டு விரலாலேயே ஒடைச்சிக்கிட்டு
உள்ள வந்தர்லாம்."

"பயமே இல்லயாலே?"
"ஒரு பயமும் இல்லை."
[அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. வந்த புதிதில் இரவில் அரை மணிக்கு ஒரு தடவை எந்திரிப்பதும், கண்ணாடி கதவை வெறித்து பார்ப்பதும் பின் வந்து படுப்பதுமாய் இருந்த என் நிலை. காரில் வெளியில் செல்லும் போது, எவ்வளவு வேகமாக சென்றாலும் எப்படியாவது எல்லாவீடுகளின் பின் பக்க கதவுகளையும் பார்த்துவிடுவேன். ஒரு நூறு, இருநூறு வீடுகளில் கண்ணாடி கதவுகளை பார்த்த பின்னர்தான் மனசு ஒரு நிலைக்கு வந்தது.]
"அமெரிக்கா நான் வரவே முடியாதுன்னு அடிச்சு விட்ர்யாலே?"-----------------
ஆம்! அவனால் நம்பத்தான் முடியவில்லை. எப்பவாவது அமெரிக்கா வந்தால் அவனும் நம்புவான்.
லாரல், ஹார்டி படம் பார்த்திருக்கீர்களா? பேசும் படம் வருவதற்கு முன்னாள் வந்தது. 1900 லிருந்து 1930 க்குள் இருக்கும். இங்கு வீட்டுக்குள்ளேயே இருப்பதால் போர் அடித்து, சி.டியில் பார்த்தேன்.
நகைச்சுவையில் என் மனம் ஆழ வில்லை. அப்ப இருந்த வீடு, காரு, ரோடோட சைடு--- கூர்ந்து பார்த்தேன். அப்பவே ரோட்டில் சென்ட்ரல் லைன் தெரிகிறது. பக்கத்தில் ட்ரெயில்(trail) தெரிகிறது, புல்வெளி
தெரிகிறது.
ஆக! அதற்கும் முன்னாள் எப்பொழுதோ எவன் மனதிலோ தோன்றிய ஒரு சிறிய பொறி பெரிதாகி, பெரிதாகி, எங்கும் வியாபித்து அமெரிக்கா முழுவதும் புல்லை வளர்க்க வேண்டும் என்ற விஸ்வரூப எண்ணத்தை தோற்றுவித்து இன்று எங்காவது 3 இஞ்சுக்கு மேல் இருந்தால் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும் என்ற ஒழுங்கு வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
ஏதோ ஒரு வகையில் சட்டத்தை மதிப்பதற்கோ, இல்லை பயப்படுவதற்கோ அமெரிக்கா மக்களை ஒருவரோ, இருவரோ அல்லது பலபேரோ ஒரு வருடத்திலோ, இருவருடத்திலோ அல்லது பல வருடங்களிலோ மாற்றி இருக்கிறார்கள்; மாற்ற முடிந்திருக்கிறது.
"இது எப்படிடா முடிந்தது?"-என் மகனை கேட்டேன்.
"ரொம்ப சிம்பிள் அப்பா! நிர்வாணமா மதுரையில் கோரிப்பாளையத்தில் நடந்துட்டு வாங்கன்னா, நடப்பீங்களா? மாட்டீங்க. சின்ன வயசிலேயே அது 'ஆயி' 'கக்கா' என்ற பல்வேறு வார்த்தைகளில், முறைகளில் சில சமயங்களில் அடித்தும் அது ரொம்ப அசிங்கமான விசயம்ன்னு உங்க அடி மனதில்அப்பா, அம்மா, சுற்றி இருப்பவர்கள் பதிய வைத்துள்ளார்கள். இங்கு பல அரசியல் வாதிகளும், பொது
நல வாதிகளும் அப்பாக்களாகவும், அம்மாக்களாகவும் இருந்து சட்டத்தை மதிக்காமல் இருப்பது ரொம்ப அசிங்கமான விசயம்ன்னு நாலைந்து ஜெனரேசனுக்கு முன்னாலேயே அடிமனதில் பதிய வைத்து சென்று விட்டார்கள். நம்ம ஊரில் அப்படி சொல்லவும் ஆள் இல்லை, அடிக்கவும் ஆள் இல்லை."
வாஸ்தவம்தான். நம்ம ஊரில் யாராவது வருவாய்ங்களா? ஏக்கமாக இருக்கிறது! உடனே நாங்க கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி; அவைங்க கலாசாரம் என்ன; நம்ம கலாசாரம் என்ன. அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு தாண்டி குதிச்சு தண்ணியிலை விழ வேண்டாம். நல்லதை மட்டும் பார்க்கலாம்தானே.

ஏக்கத்தோடு லேசா ஒரு எண்ணமும் வந்தது. ஊருக்கு போய் வீட்டுக்கு முன்னால் சும்மா கிடக்கும் இடத்தில் புல் வளர்ப்போமேன்னு.
கூடவே அனிச்சை செயலாக விபரீத கற்பனையும் வந்தது. நான் புல்லு வளர்க்க........பக்கத்து வீட்டுக்காரன் அதுக்கின்னே ரெண்டு மாடு வளர்க்க.....மாடு வந்து புல்லை மேய....நான் போய் அவனை அதட்ட....அவன் சொன்ன அந்த ஏழு வார்த்தைகள் என்னை நிலை குலைய வைத்தது. அருவாளை எடுத்து வெட்ட வந்திருந்தால் கூட அப்படி பயப்பிட்டிருக்க மாட்டேன். வேறொன்றுமில்லை அவன் சொன்னது. "நான் மாவட்டத்துக்கு ரொம்ப வேண்டியவன், பேசாம பொத்திக்கிட்டு போயிடு."

11 comments:

kavithasivakumar said...

கட்டுரையிலும் கலக்குகிறீர்கள்.தொடரட்டும் இந்த பயணம்!!!!!

ve said...

வாழ்த்துக்கள் டாடி, ரெம்ப நன்றாக உள்ளது, கட்டுரையும், கவிதையும், மிகவும் அருமை, தொடரட்டும் இந்த பயணம், தொடரட்டும் உங்கள் சேவை.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்குங்க சார்..,

Venkata said...

Periyappa remba supera irukku periyayappa, eppadi periyappa ippadi kalaakuringa, ellorumaye paduchoam peiyappa, thavam, karunai, thiyanam appuram oru katurai mathiri eluthi irunthingalaye nalla irundhathu periyappa

Priya.

அது ஒரு கனாக் காலம் said...

மேலோட்டமாக நகைச்சுவை தெரிந்தாலும், நல்ல விஷயத்தை அழகாக எழுதி இருக்கிறீர்கள் ... நல்லா இருக்கு

அண்ணாதுரை சிவசாமி said...

ரொம்ப நன்றிதம்பி.மனசில் இருப்பதை கொட்டிவிட்டேன்.
அடிக்கடி தொடர்பு கொள்வோம்,உங்கள் 'பிளாக்கை' முழுவதும்
படித்து முடித்துவிட்டு.

அண்ணாதுரை சிவசாமி said...

சுரேஷ் தம்பி!
மிக்க நன்றி தம்பி.உங்கள் 'விலை மகளே பரவாயில்லை' என்ற வேதனையான நிகழ்வை படித்தேன்.
மாறும் காலம் கூப்பிடும் தூரத்தில்தான் உள்ளது.கண்டிப்பாக மாறும்.
-அண்ணாதுரை

thubairaja said...

வாழ்த்துக்கள்.மிகவும் அருமை.கட்டுரையும் ரெம்ப நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் இந்த பயணம்.

அண்ணாதுரை சிவசாமி said...

வாழ்த்துக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை
கொடுக்கிறது தம்பி.சேர்ந்து பயணத்தை
தொடருவோம்.

amir said...

Appa kallakkal .............

அண்ணாதுரை சிவசாமி said...

அமீரின் வருகைக்கு அப்பாவின் நன்றிகள்

Post a Comment