1959 ஆம் வருடம்தான்னு நினைக்கிறேன்.வீர பாண்டிய கட்டபொம்மன் படம் வந்தது.நாலாவதோ ஐந்தாவதோ படிக்கிறேன். சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டரில் பார்த்தது. தியேட்டர் முதல்கொண்டு சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா.எங்க ஊரிலே அது ஒன்னுதான் தியேட்டர்.
கட்டபொம்மன்னு சொன்னாலே மோகனும் சேர்ந்து வந்துருவான். பிரியமான முதல் நண்பன், அப்புறம் உறவினன். கட்ட பொம்மன் படம் நேற்று வந்தது போல் இருக்கிறது. சிவாஜி கணேசனுக்கு நடிப்பிற்க்காக முதல் அவார்ட் வாங்க்கிகொடுத்த படம். அதுவும் உலகளவில். கெய்ரோவில் நடந்த பட விழாவில் கொடுக்கப்பட்டது.
"உம்....நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ!
"உம் ...நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ!
"ஏது இவ்வளவு தூரம் .......
"நட்பு நாடியது ....அதனால் யாம் வந்தோம்....
"உன் மீது குற்றம் சுமத்துகிறேன்...
"என்னவென்று .......
"எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது...
"எண்ணிக்கிகை தெரியாத குற்றம் .....
"எனக்கா எண்ணிக்கை தெரியாது....சொல்கிறேன் கேள்...
வரி செலுத்தவில்லை, நீண்ட காலமாக வட்டியும் செலுத்தவில்லை .....கிஸ்தியும்
செலுத்தவில்லை.....
"வரி....வட்டி....கிஸ்தி. யாரைக்கேட்கிறாய் வரி! எதற்கு கேட்கிறாய் வட்டி! எங்களோடு வயலுக்கு வந்தாயா!நாற்று நட்டாயா!களை பறித்தாயா!ஏற்றம் இறைத்து நெடு வயல் பாயக்கண்டாயா! அங்கே கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா! அல்லது மாமனா மச்சானா!"
இதிலே ஒன்னு ரெண்டு வார்த்தைகள் முன்னை பின்னை இருக்கலாம். ஓரளவு சரியா இருக்கும். இதை எழுதிக்கிட்டு இருக்கும்போதே கட்ட பொம்மன், நம்ம சிவாஜி சார் மீசையை மேல் நோக்கி முறுக்கிக்கிட்டு தோள் மேல் கையைப்போடுகிறார். நேத்து பார்த்த படத்தோட வசனம் ஏதாவது ஞாபகத்திற்கு வருதா பாருங்க; வராது, காரணம் சிவாஜிங்க!நடிக்கிறதுக்குன்னே பிறந்த மனுஷன். ஏறத்தாழ ஐம்பது வருசமா நெஞ்சிலே போட்ட வார்த்தைகளை அந்த மனுசனோட நடிப்பு நிறுத்தி வைக்குதுனா பாருங்களேன்.
ஐந்தாவது படிக்கும் போது ஆரம்பித்தது. நான் கட்ட பொம்மன் பார்ட்லையும் மோகன் ஜாக்சன் துரை பார்ட்லையும் நடிப்போம். அப்ப இருந்த பெருசுகளுக்கெல்லாம் நாங்க ஒரு பொழுது போக்கு. மங்கலம், மதுரை, சிவகங்கை இங்கெல்லாம் லீவுக்கு செல்லும் போது எங்க கொடி பறந்தது. கொஞ்ச நாளில் எனக்கும் அவனுக்கும் பிரச்சனை வந்தது. தான் கட்டபொம்மனாக நடிப்பதாக சொல்லும் போது நிர்தாட்சியமா மறுத்துவிட்டேன் நான். பல தடவை கேட்டான். பலதடவையும் மறுத்து விட்டேன், கட்டபொம்மன் கண்கள் கொப்பளிக்க வசனம் பேசும் போது, திரும்ப கோபத்தோடு பேச வேண்டிய ஜாக்சன் துரை ஏக்கமாக பேசுவார். "ஒரே ஒரு தடவைடா...." என்று பலமுறை கேட்டும் நான் ஒத்துகொள்ளவே இல்லை. என் இமேஜ் போய் விடும் என்ற பயம் எனக்கு. மேலும் அவன் எனக்கு கொஞ்சம் பயந்தவன். அதனால் எப்ப கூப்பிட்டாலும் நடிக்க வந்து விடுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் "ஒரே ஒரு தடவைடா..."என்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. ஐந்தாவதில் ஆரம்பித்தது ஒன்பதாவது வரை கேட்டுகொண்டிருந்தான், கடைசியில் நடிப்பதை நிறுத்திகொண்டோமே தவிர அவன் கோரிக்கை நிறைவேறவே இல்லை.
1978 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஒரு சனிக்கிழமை காலை கடலை மிட்டாய் தின்றுகொண்டே கொடைக்கானல் தற்கொலைப்பாறையிலிருந்து குதித்து மோகன் தற்கொலை செய்துகொண்ட பின்னர் யாரவது கட்டபொம்மனை பற்றி பேசினால் கண்களில் நீர் கொப்பளிக்க விலகி சென்று விடுவேன். 30 வருசத்திற்கு மேல் அவனை நினைத்து சனிக்கிழமைதோறும் வைராக்கியமாக விரதம் இருக்க பழகிக்கொண்ட இந்த சனியன் புடிச்ச மனது ஒரே ஒரு தடவை அனுமதிக்க மறுத்துவிட்டது. மனது போன்று மனிதனை கொடுமை படுத்தக்கூடிய ஒன்று உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இல்லீங்களா?
Tuesday, June 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
1978 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஒரு சனிக்கிழமை காலை கடலை மிட்டாய் தின்றுகொண்டே கொடைக்கானல் தற்கொலைப்பாறையிலிருந்து குதித்து மோகன் தற்கொலை செய்துகொண்ட பின்னர் ......
!!!!!!!!!!!!
Y ?????????
// காரணம் சிவாஜிங்க!நடிக்கிறதுக்குன்னே பிறந்த மனுஷன். ஏறத்தாழ ஐம்பது வருசமா நெஞ்சிலே போட்ட வார்த்தைகளை அந்த மனுசனோட நடிப்பு நிறுத்தி வைக்குதுனா பாருங்களேன்.//
சில போலி அறிவுஜீவிகள் தவிர எல்லோருக்கும் தெரிந்த உண்மை
க்கரைக்கல் பதியும் தெலுங்கந்தான்!
ஆனால்,பிழைப்பது தமிழ்னாட்டில்;எந்த சூழ்னிலையிலும்,தமிழன் என்ற அடையாளத்தை இழந்தது இல்லை:
துரதிஷ்டமான விசயம்:தமிழர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழன் என்பதை மறந்தது!
இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை
தம்பி,தங்கள் வருகைக்கும் நியாயமான கோபத்திற்கும் நன்றி.
ஜோ தம்பி,
உங்களை என் மகனோட நண்பன் ஜோ என்று நினைத்து விட்டேன்.
அதைத் தாமதமாக தெரிந்து கொண்டேன். தங்கள் வருகைக்கு
என் நன்றி.
துபாய்ராஜா தம்பி,
தங்களின் வருகைக்கு தாமதமாக நன்றி
சொல்கிறேன்.பொறுத்துக்கொள்ளவும்.
ivar en chitthappaa.appaavin miga viruppamaana sagotharar.ennayaium ivarayum en appaavin tharaasil vaitthal ivar pakkam oru noolaagavathu thaazhum.patthu,iruvathu varudamaaga kirukkikondirukkiren.eduttha eduppil parakka,ellorukkum vaaikathu.ivarukku vaaithirukkirathu.ivar en chitthappaa ena yearpathil avvalavu paanthamaaga irukkirathu.
Post a Comment